திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் ஜமால். இவர் மீது சில வழக்குகள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளில் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தார். சரக்கு லாரி ஓட்டிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்றவர், கடந்த 19- ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வீட்டிற்க்கு திரும்பி வந்தார்.
அன்றைய தினம் விடியற்காலை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து வாணியம்பாடி நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி வாணியம்பாடி கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர். அப்போது அவருக்கு லேசான சளி மற்றும் இருமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 20- ஆம் தேதி அவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த கிளைச்சிறை மேற்பார்வையாளர் கைதியை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவருக்கு கரோனா இருக்குமோ என சந்தேகமடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வாணியம்பாடி கிளைச் சிறையில் உள்ள 11 கைதிகள் சிறை காவலர்களுக்கு ஏதேனும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதா? என்று அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் சிறைச்சாலைக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளித்து காவலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.