இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவ்வாறு ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தமிழகத்திலும் கரோனா வைரஸ் தாக்கம் பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து அதிகபட்சமாக சென்னையில் இன்று 567 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8795 ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 0.7% என்ற அளவில் இருக்கிறது. இதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து 400 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 6,282 ஆக உயர்ந்துள்ளது என்றார்
மேலும் தமிழகத்தில் 41 அரசு, 25 தனியார் என கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 63 லிருந்து 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 3.72 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பாசிட்டவாக வருவோர்தான் தற்போதைய சவாலாக உள்ளனர். இதேபோல் முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டுக்கு சென்ற 25 பேருக்கு கரோனா வந்ததால் பெரும் சவாலாக அமைந்தது. புதிய சவால்களால்தான் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது"என தெரிவித்தார்.