சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணாமடைந்தோர் விகிதம் என்பது 94 சதவிகிதமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நோயாளிகளுக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சர்வதேசத் தரத்திலான சிகிச்சையால் 26,762 பேர் இது வரை கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். தற்பொழுது இணைநோய்கள் உள்ள கரோனா நோயாளிகளுக்கு 1,500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில், கரோனா நோய்ப் பரவல் தடுப்புப் பணி மற்றும் சிகிச்சை என்பது சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாம் அலை இல்லை. அதேபோல் தொற்று பாதிப்பு அதிகரிப்பும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக பண்டிகைகள், நிவர் புயல் பாதிப்பு, குளிர்காலம் உள்ளிட்ட காரணங்களால், கரோனா தடுப்பு பணி என்பது சவாலாக உள்ளது. இருந்தபோதிலும் சுகாதாரத்துறை தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது என்றார்.