நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லியில் வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் 2முறை எம்.பியாக இருந்த மனோஜ் திவாரியும், காங்கிரஸ் சார்பில் கன்னையா குமாரும் களத்தில் உள்ளனர். இவர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போது டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் ஆம் ஆத்மி அலுவலகம் அருகே கன்னையா குமார் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் கொடுத்த புகாரில், முதலில் கன்னையா குமாருக்கு சிலர் மாலை அணிவித்தனர், அதன்பிறகு கன்னையா குமார் மீது மையை ஊற்றிய அவர்கள் தாக்க முயன்றனர் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மனோஜ் திவாரிதான் காரணம் என குற்றம்சாட்டிய கன்னையா குமார், தேர்தலில் நான் வெற்றி வெற்றுவிடுவேன் என்ற அச்சத்தில் இதனை செய்திருக்கக்கூடும் என தெரிவித்திருக்கிறார்.