கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு மேட்டுப்பாளையம் உதகை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்படி மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் போலீசார் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்பொழுது அந்த லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது உறுதியானது. மேலும் அங்கு இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை பிடித்து பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இந்த லாட்ஜை மாத வாடகைக்கு குத்தகைக்கு எடுத்து விபச்சார தொழில் செய்து வந்த குத்தகைதாரர்களான வேலூரை சேர்ந்த மகேந்திரன், கணேசன் ஆகியோரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து , சிறையில் அடைத்தனர்.
மேலும் விடுதி அறைகளை சோதனை செய்தபொழுது ஓர் அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை சந்தேகத்தின் அடிப்படையில் தள்ளிப் பார்த்தனர் போலீசார். முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் யாரும் அறியாதவாறு ஒரு ரகசிய அறை இருந்தது. காவல் துறை சோதனையிட்டால் மறைந்து கொள்வதற்காக அந்த அறையை பயன்டுத்தி வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் கரோனோ காலத்தில் லாட்ஜ்கள் இயங்க அனுமதி இல்லாதபோது, இந்த லாட்ஜில் மட்டும் தங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? இந்த லாட்ஜைப் போல இன்னும் பல லாட்ஜ்கள் இயங்குகின்றனவா? என்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.