கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது மணவாளபுரம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். 40 வயது மதிக்கத்தக்க இவர், தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டிட வேலைகளைச் செய்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரின் மனைவி ரதி. இந்தத் தம்பதிக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் இந்தத் தம்பதி, குலசேகரப்பட்டினத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் எடுத்துள்ளனர்.
பின்னர், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். இந்தக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி, சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அதன்படி, இந்தத் தம்பதியரும் தங்களது குழந்தைகளோடு அங்கேயே தங்கியுள்ளனர். அப்போது, இந்தத் தம்பதி தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தங்கியுள்ளார். முத்துராஜ் குடும்பத்தினரிடம், தான் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவதாகவும், தான் மிகப்பெரிய முத்தாரம்மன் பக்தை எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், முத்துராஜின் குழந்தைகளோடு மிகுந்த பாசத்தோடு பழகி வந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முத்துராஜ் மற்றும் ரதி தம்பதி தங்களது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். இதனைக் கவனித்த 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும், அவர்கள் சென்ற பிறகு அவர்களை நோட்டமிட்டபடி நின்றுள்ளார்
அந்த சமயத்தில், துணி துவைக்க சோப்பு இல்லை எனத் தனது கணவர் முத்துராஜியிடம் ரதி கூறியிருக்கிறார். மனைவி சோப்பு கேட்டதும் உடனே வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, தனது கையில் இருந்த தனது ஒன்றரை வயது குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுவரை தூரத்தில் நின்றுகொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் நோட்டமிட்ட அந்தப் பெண் அங்கு வந்துள்ளார். அப்போது ரதியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு, விளையாட்டு காட்டியுள்ளார். உடனே ரதியிடம், ஏம்மா... குழந்தை ஐஸ்கிரீம் கேக்குறாம்மா? நான் வாங்கி தரட்டுமா? என அடக்கமாக கேட்டுள்ளார். இதனைக் கேட்ட முத்துராஜியின் மனைவி ரதியும், சரிக்கா... வாங்கி கொடுங்க.. என மகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். குழந்தையின் அம்மா அனுமதி கொடுத்தவுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, கொஞ்சியபடி கடைகள் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றுள்ளார். அதன்பிறகு, சிறிது நேரம் கழித்து சோப்பு வாங்கிக்கொண்டு வந்த முத்துராஜ், மனைவி ரதியிடம் குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு ரதியும் அந்த அக்கா தான் தூக்கிட்டு போயிருக்காங்க" எனக் கூறியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற பெண் திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமான முத்துராஜ் - ரதி தம்பதி கோவில் வளாகம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால், எங்கேயும் குழந்தை இல்லை.
ஒருகட்டத்தில், அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முத்துராஜ் தம்பதிகள் கூறிய நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சுடிதார் அணிந்துகொண்டு குழந்தையோடு வேகமாக செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையில் 25 பேர் அடங்கிய 4 தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இத்தகைய சூழலில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டியில் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, உடனடியாக கோவை ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட ஆலாந்துறை போலீசார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், திலகவதி தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும், கடத்தப்பட்ட குழந்தை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாகக் கூறி உள்ளனர்.
இத்தகைய சூழலில், கைது செய்யப்பட்ட தம்பதி ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது, கழிவறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்ற திலகவதி, சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திலகவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே, குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பால் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கடத்தப்பட்ட குழந்தை சேலம் ஆத்தூரை அடுத்த தென்னம்பிள்ளையூர் கிராமத்தில், பச்சியம்மாள் என்பவர் வீட்டில் இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீசார் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். ஒருகணம், தங்களுடைய குழந்தையை பார்த்த முத்துராஜ் - ரதி தம்பதி கண்ணீர் விட்டுக் கதறிய நிலையில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்ராஜ் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தங்களுடைய குழந்தையைப் பெற்றுக்கொண்ட தம்பதி அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது, முத்தாரம்மன் கோவிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.