சசிகலா உடல்நலம் குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்கள், பேரழிவு பெருமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. 'அறுவடை ஆய்வறிக்கை' என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு கொடுப்பதில் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு வறட்சி பாதித்த போது மாவட்ட அளவில் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்ததோடு மட்டுமல்ல, உரிய இழப்பீட்டை 100% பெற்றுக் கொடுப்பதற்கான உத்தரவாதம் கொடுத்து பெற்றுக் கொடுத்தார்.
அதனைப் பின்பற்றி தற்போதைய முதலமைச்சர் உடனடியாக உரிய 100% இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளித்திட வேண்டும். அதனை மார்ச் மாதத்திற்குள்ளாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000 இழப்பீடாகப் பெற்றுத்தர வலியுறுத்தி, நாளை 22ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகையிட உள்ளனர். மயிலாடுதுறையில் நான் (பி.ஆர்.பாண்டியன்) தலைமையேற்க உள்ளேன்.
காவிரி பிரச்சனையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக உரிமையை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உறுதியோடு இருந்து மீட்டுக் கொடுத்தார். அந்த நடவடிக்கைக்கு முழு பின்புலமாக சசிகலா இருந்து வந்தார். தற்போது கர்நாடக சிறைவாசம் முடிந்து விடுதலையாக கூடிய நிலையில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் வெளிவந்த செய்தி டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும் சந்தேகமும் அளிக்கிறது. காரணம் காவிரிக்காக நீதி கேட்ட சட்டப் போராட்டத்திற்கு ஜெயலலிதா அவர்களோடு துணை இருந்தவர் என்ற அடிப்படையில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளது.
எனவே அவரது உடல்நலம் குறித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட மருத்துவக் குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்து சசிகலாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவிரி டெல்டா விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.
இந்த நிகழ்வில், மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட கவுரவ தலைவர் எம்.செல்வராஜ், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், திருத்துறைபூண்டி ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், துணைச் செயலாளர் கச்சனம் தவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.