சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 14ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில், போயஸ் கார்டன், டி.நகர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூரில் உள்ள மார்ட்டினுடைய வீடு மற்றும் மார்ட்டின் குழும அலுவலங்கள் மட்டுமல்லாமல், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்களில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3 நாட்களாக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை காரணமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல், அன்றைய நாளில் லாட்டரி அதிபர் மார்ட்டினை தொடர்ந்து, மார்ட்டினின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று(16-11-24) நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில், இரண்டு பைகளில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக, ஆதவ் அர்ஜூனா ஏதேனும் நிதியுதவி வழங்கியிருக்கிறாரா? என்பதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.