பயிற்சி முடித்த உடனேயே நெல்லை மாவட்டத்தின் அம்பை சப்-டிவிசனின் ஏ.எஸ்.பி.யாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர்சிங். தான் பணியாற்றுகிற மாவட்டத்தின் தனது உயரதிகாரியும் ஐ.பி.எஸ். ரேங்க் என்றால் ஒத்துப்போவார். மாறாக அவர் ரேங்க் புரமோட்டர்டு ஐ.பி.எஸ். என்றால், அவர்களிடம் தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்கிற கெத்தை காட்டும் குணம் கொண்டவர் பல்வீர்சிங் என்கிறார்கள், அவரைப் பற்றி அறிந்தவர்கள்.
அம்பை சப்-டிவிசனில் வருகிற அம்பை நகரம், கல்லிடைக்குறிச்சி வி.கே.புரம் காவல் சரகத்திற்கு வரும் புகார்களில் தொடர்புடையவர்கள், சாதாரணமான புகார் என்றாலும் அது தொடர்பான விசாரணைக்கு வருபவர்களை ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கே நேரடியாக ஹேண்டில் செய்திருக்கிறார். கடுமையாக நடந்து கொள்வாராம். காவல் நிலையத்தின் தனியறையில் விசாரணை என்ற வகையில் அவர்களை அடைத்து வைத்து உதவிக்கு காவல்நிலைய அதிகாரிகளின் துணையுடன், விசாரணை நடத்துகிற பல்வீர்சிங் ஒரு கட்டத்தில் மூர்க்கமாகி அவர்களின் வாயில் சின்னச் சின்ன கற்களைப் போட்டு திறக்கக்கூடாது. வாய் மூடியே இருக்க வேண்டும். பற்களைக் கடிக்கணும் என லத்தி அடியில் பயமுறுத்த, கதறும் அவர்களைத் திமிற விடாமலிருக்க காவல்நிலைய சக காவலர்கள் அவர்கள் கைகால்களை முறுக்கிக்கொள்ள, வைக்கிற லத்தியடியில் வேதனை தாங்காமல் பற்களைக் கடிக்கிறபோது, கற்களால் வாயில் ஏற்படும் காயங்கள் பற்களை ஆட வைத்துவிடுமாம், பின்னர் கட்டிங் பிளேயரால் ஆடுகிற பற்களைப் பிடுங்கி வெளியே எடுத்துவிடுவதுண்டாம்.
மனித சமூகம் கேள்விப்படாத இந்த மூர்க்கத்தனமான சித்ரவதையால், விசாரணைக்கு வந்த ஒவ்வொருவரிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட பற்கள் பிடுங்கப்பட்டனவாம். அளவுக்கதிகமான வலியால் கதறமுடியாமல் வாயில் ரத்தம் கொப்பளிக்க வெளியேற்றும் அவர்களை, நடந்ததை வெளியே சொன்னா, வேற கேஸ்ல வெளியவரமுடியாத அளவுக்கு உள்ள தள்ளிறுவோம் என மிரட்டப்படுவதால், போலீஸாச்சே, என்ன வேணாலும் பண்ணுவாக என்ற பயத்தில் பலர் சொல்லாமலும், காதும் காதும் வைத்தமாதிரி பற்களின் ரத்த காயங்களுக்கு சிகிச்சை எடுத்துள்ளனர். இந்த ரூட்டில் நடந்தவைகள் வெளியே வராமல் போனதின் விளைவு ஏ.எஸ்.பி.யின் பற்கள் பிடுங்குகிற கொடூரங்கள் விரிவடைந்திருக்கின்றன. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல்நிலையங்களில் அந்தந்த காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு பற்களைப் பிடுங்குகிற ஆபரேஷன் நடந்திருக்கின்றனவாம்.
ஆனால் இந்த ஆபரேஷனில் பாதிக்கப்பட்ட ஜமீன் சிங்கம்பட்டியின் சுபாஷ், இந்த பல்பிடுங்கல் சம்பவத்தில் தன்னுடைய 8 பற்கள் சிதிலமாகி சிகிச்சை எடுத்தும் வேதனையில் தவித்ததை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவரும், வழக்கறிஞருமான மகாராஜனிடம் தெரிவிக்க, ஏரியாவுக்கு வந்த அவர் நடந்தவைகளை அறிந்தும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பதறியிருக்கிறார்.
வழக்கறிஞர் மகாராஜன் இதனை விசாரிக்கப் போய் அதே கிராமத்தின் சூர்யா, லட்சுமி சங்கர், வெங்கடேஷ், வி.கே.புரத்தின் மட்டன் கடை சகோதரர்களான மாரியப்பன், செல்லப்பா, மாயாண்டி, ஆட்டோ டிரைவர் வேதநாராயணன் என்று வரிசையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்தி கதறியிருக்கிறார்களாம்.
இதனையடுத்தே விஷயத்தை நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வரை கொண்டு போக, அவரிடம் விரிவான புகார்களையும் கொடுத்திருக்கிறார்கள். பதற்றமடைந்த ஆட்சியர் சம்பவத்தை விசாரித்து அறிக்கை தர சேரன்மகாதேவி சப் கலெக்டரான முகம்மது சபீர் ஆலத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். பற்கள் பிடுங்கப்பட்ட இந்தக் கொடூரத்தில் 14 பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டது கடந்த மார்ச்சின் போது வெளியேறி தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலாளரான அமுதாவை விசாரிக்கும்படி உத்தரவிட, அவரும் சம்பவ இடம் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அவரது அறிக்கையையடுத்து காரணமான ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மார்ச் 29 அன்று சஸ்பென்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்குத் துணைபோன இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, பெருமாள், ஏட்டு போகபூமன், சந்தனகுமார், மணிகண்டன். எஸ்.ஐ. சக்தி நடராஜன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டார்கள்.
இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வேத நாரயணன், வெங்கடேஷன் சூர்யா, மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார், A1 ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்.ஐ. இசக்கிராஜா, கார்த்திக், சதாம் உசேன் ராஜ்குமார், ஆபிரகாம் ஜோசப், ராமலிங்கம் உள்ளிட்ட காவல்துறையினர் 15 பேர் மீதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நெல்லை முதலாவது ஜே.எம். கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
டிச. 15 அன்று விசாரணை என்பதால் அன்றையதினம் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். மீடியாக்கள் இருப்பதால் தவிர்க்கும் பொருட்டு வி.ஐ.பி.க்களின் வாயில் வழியாக உள்ளே வந்தார் பல்வீர்சிங். புகார் தாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜன், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது. சி.பி.சி.ஐ.டி.யினர் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. பல் பிடுங்கியதற்கு ஆதாரமான கட்டிங் பிளேயர், ரத்தக்கறை படிந்த ஆடைகள், அவர்களை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனம் போன்றவைகளை பறிமுதல் செய்யவில்லை, என்றும் இவர்களை கைது செய்து பல்பிடுங்கப் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு மாஜிஸ்திரேட் திரிவேணி 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்கறிஞர் மகாராஜன், “வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தடயங்களை மறைத்தது பெரிய குற்றம். 201 ஐ.பி.சி.யின் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவு. குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் போலீசார், இதில் ஏ.எஸ்.பி. உள்ளிட்டவர்களைக் கைது செய்யவே இல்லை. இது சீரியஸ் அஃபென்ஸ். இந்த மாநிலத்தில் விசாரணை நடத்தப்பட்டால் பாதிப்பிற்குள்ளான அனைவரும் சுதந்திரமாக வரமுடியாது. எப்படி சாட்சி சொல்ல வரமுடியும். வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும். அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற நாங்கள் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார் அழுத்தமாக.
ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைராஜோ, “வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே எதிரியை கைது செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொறுப்பான அதிகாரிகள். எங்கும் போகவில்லை. வழக்கு விசாரணைக்கு இடையூரோ, சாட்சிகளை கலைப்பது போன்றவைகளுக்கு இடமில்லை. அவர்கள் பணியில்தான் உள்ளனர். இது பொய் வழக்கு என்று நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.