விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது கண்டாச்சிபுரம். இப்பகுதியில் வீடுகளில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்துகொண்டு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் கண்டாச்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் மருதப்பன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்டாச்சிபுரம் இருளர் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாரூக் பாஷா(29) என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அங்கு சுமார் 550 மது பாட்டில்கள் சாக்கு மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பாரூக் பாஷாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி சுமதி(37) மற்றும் செந்தில் மனைவி ரஞ்சிதா(30) ஆகியோரும் அவரவர் தங்கள் வீடுகளில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களது வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அந்த இரு பெண்கள் உட்பட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் வேடம்பட்டு சிறையில் அவர்களை காவல்துறையினர் அடைத்தனர்.