கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசத்தி பெற்ற ஆன்மிக தலம் ஆகும். இங்கு நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை இன்று (15.11.2024) மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண முழக்கங்களை எழுப்பினர். சபரிமலை தந்திரி கண்டிரு மகேஷ் மோகனரு, தந்திரி பிரம்ம தர்சன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதாவது கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி பிரதான மண்டல பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி வரை என 62 நாட்களுக்குக் கோயில் நடை திறந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும், கேரள அரசும் கவனித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,‘சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைப்பேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757 இல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.