Skip to main content

மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டினை மேற்கொள்ள சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

chennai merina beach shops chennai high court

 

மெரினாவில் 900 தள்ளுவண்டிக் கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரியை, சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

 

மெரினா அழகுபடுத்துதல், புதிய மீன் அங்காடி அமைத்தல், நடைபாதை மற்றும் நடைமேம்பாலம் அமைத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இன்று (15/12/2020) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினாவில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 6- ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

 

மேலும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில், புதிய மீன் அங்காடி மற்றும் மீனவர்கள் லூப் சாலையைக் கடக்காமல், கடற்கரையை அணுகுவதற்கு நடைமேம்பாலம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாகவும், அவற்றிற்கு மாநகராட்சி பதிலளித்து உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

chennai merina beach shops chennai high court

 

அதனடிப்படையில், மத்திய அரசுதான் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர்.

 

அப்போது, நடைபாதை வியாபாரிகள் தரப்பில், மெரினாவில் 1200- க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் ஈட்டிய நிலையில், 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்க உள்ளதாகவும், மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதிகள், 900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்குச் சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெளிவுபடுத்தினர்.

 

900 தள்ளுவண்டிக் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை, ஜனவரி 20 மற்றும் 21- ஆம் தேதிகளில் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், அந்தப் பணிகளை மேற்கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வுபெற்ற சதீஷ்குமார் அக்னிகோத்ரியை நியமித்தும் உத்தரவிட்டனர்.

 

வழக்கு விசாரணையை, ஜனவரி 8- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் 900 தள்ளுவண்டிக் கடைகளில், முதற்கட்டமாக 300 வண்டிகளைக் கொள்முதல் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்