
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசை விமர்சித்து உரையாற்றினார். கடந்த ஜூன் 5-ல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து டிவிட்டரில் ஸ்டாலின் சில கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுபோல, முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் பேசியது முரசொலி பத்திரிக்கையில் செய்தியாக வெளியானது.
இந்த மூன்று விவகாரங்கள் தொடர்பாக, தமிழக அரசுத் தரப்பில் தனித்தனியாக மூன்று அவதுாறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மூன்று அவதுாறு வழக்குகளும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று வழக்குகளிலும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.