வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதியதாக இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் தொடக்க நிகழ்ச்சி வரும் 28ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி வருகிறார். இந்நிலையில் புதிய மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்து அந்தப்பகுதியை சீரமைக்கும் பணி நவம்பர் 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான ரவி பார்வையிட்டார். அவருடன் ஆளும்கட்சியினரும் வந்திருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தினை பார்வையிட்டனர்.
"அதிகாரிகளிடம் முதல்வர் வருகை மற்றும் மாவட்டம் தொடக்கம் ஆகியவற்றிற்கு நன்றி சொல்லும் விதமாக பேனர் வைக்க விரும்புகிறோம், இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த விரும்புகிறோம். இதற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கி தரவேண்டும்" என சில அதிகாரிகளிடம் ஆளும்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுகவின் இராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா பகுதி முக்கிய நிர்வாகிகளும் இதுப்பற்றி முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுள்ளனர், இன்னும் அங்கிருந்து எந்த பதிலும் வராததால் தவிப்பில் உள்ளனர் அதிமுகவினர்.