
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 814 கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வின் போது, மூன்று தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2019- ஆம் ஆண்டு 814 கணிப்பொறி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணியிடங்களுக்கு 26 ஆயிரத்து 882 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், மூன்று மையங்களில் இணையதள சேவை கிடைக்காமல் தேர்வு தடைபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், மூன்று மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இப்பணிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், மூன்று தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதேசமயம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி தனியார் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார்.
இந்த விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆதிநாதன் ஆணையத்திற்கும் அறிவுறுத்தினார். நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கவும், அவருக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், தமிழக அரசுக்கு நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.