
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இந்த வழக்கை12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று (27.02.2025) சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக இன்று (28.02.2025) காலை 11 மணிக்குச் சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சீமான் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காகத் தனியாக போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் தர்மபுரியில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவல்துறையின் விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லை என்று தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்?. காவல்துறையினர் ஒட்டிய சம்மன் நான் படிக்கவா?. இல்லை நாட்டு மக்கள் படிக்கவா?. காவல் துறை ஒட்டிய சம்மனைக் கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காகச் சம்மனைக் கிழித்தவரைக் கைது செய்வீர்களா?. சம்மனைக் கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?.
சம்மனைக் கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?. என் கூட மோதி ஜெயிக்க முடிய வில்லை. என்னை பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல. என்ன செய்யனு தெரியாமல், அப்பப்போ ஒரு பெண்ணை கொண்டுவந்து முன்னாடி நிறுத்துகிறீர்கள்” என ஆவேசமாகப் பேசினார். மேலும் இணையத்தில் பயன்படுத்த முடியாத வகையில் “வயசுக்கு வந்த உடனே குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டுப் போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா க****சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க...” எனப் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.