
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகத்தியா’.வேல்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டத்தோ ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 28 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜீவாவை சந்தித்தோம். அப்போது படம் தொடர்பாகவும் அவரது ஆரம்ப கால திரை வாழ்க்கை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவரிடம்‘ஈ’ படத்தில் நடித்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் பதிலளித்ததாவது, “ஈ கேரக்டர் ஆழமானதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். ஜனநாதன் சார் ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உள்ள டைரக்டர். அவரிடம் அந்த கொள்கையின் தாக்கம் அதிகமாக இருக்கும். பொதுவாக கம்யூனிஸ்ட் கொள்கை சம்பந்தமாக வசனம் பேசினால் அது மக்களுக்கானதாக இருக்கும். அதில் அரசியல் நையாண்டியும் கலந்திருக்கும். அந்த நையாண்டிக்காக நடித்தேன்” என்றார்.