Skip to main content

நிலத்தடி நீர் குறித்த ஆய்வுக்கு வந்த டெல்லி அதிகாரிகள்; ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு வந்ததாக மக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

    இந்தியாவில் நிலத்தடி நீர் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து மீண்டும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஜல்சக்தி அபியான்  என்ற திட்டத்தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

v


தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி சுற்றியுள்ள வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த காலங்களை விட குறைந்துள்ளதால் எதனால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது மீண்டும் நிலத்தடி நீரை பூமிக்குள் செலுத்தி எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும், நிலத்தடி நீரை சேமிக்க அரசுகள் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வுகள் செய்ய மத்திய உணவு, பொது விநியோகத்துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷா சென்ஷர்மா,  மத்திய உணவு பொது விநியோகத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நீர்  வாரிய தொழில்நுட்ப அலுவலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். 

 


வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் உள்ள மழைத் தண்ணீர் செல்லும் வரத்து வாய்ககால் மற்றும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதை மத்திய ஆய்வுக்குழுவினருடன் மாவட்டக் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போல கஜா புயலில் மரங்கள் சாய்ந்ததால் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். தொடர்ந்து லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள தடியமனை கிராமத்தில் வடிவழகன் குளத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ. 1.65 லட்சத்தில் கட்டப்படுள்ள தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


இது குறித்து ஆய்வுக்குழுவினர் கூறும் போது.. கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. அதனை மேம்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்து வருகிறோம். தற்போது நிலத்தடி நீரை சேமிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தடுப்பணைகளை பார்வையிட்டுள்ளோம். மேலும் ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகு மேலும் நிலத்தடி நீரை சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளது என்றனர்.

 

    மத்திய ஆய்வுக்குழுவினர் திடீரென வடகாடு, தடியமனை ஆகிய கிராமங்களுக்குள் சென்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்ட போது அப்பகுதியில் நின்ற சிலர் எதற்காக வந்துள்ளனர் என்பது பற்றி தெரியாமல் ஏதோ புதிய திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய வந்துவிட்டதாக கூறி ஆய்வுக்குழுவினரிடம் கேட்டனர். மேலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக டெல்லியிலிருந்து குPவினர் வந்துவிட்டனரோ என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் பிறகு அவர்களுடன் வந்த மாவட்ட அதிகாரிகள் நீர்நிலை பற்றி ஆய்வு என்று விளக்கம் கொடுத்து சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.
    மேலும் இதுக்கு முன்னால புயலால் பாதிக்கப்பட்ட போது இதே போல மத்திய குழு வந்து பார்த்தார்களே எங்களுக்கு என்ன செஞ்சாங்க. நடப்பு பட்ஜெட்ல கூட எதுவும் அறிவிக்கல. இப்ப நிலத்தடி நீரை சேமிக்க குழு வந்திருக்கு என்ற கேள்வி எழுப்பினார்கள் மக்கள். 
            
 

சார்ந்த செய்திகள்