
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்க ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்.
இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.