
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த அறிமுக நடிகை கயாடு லோஹர் ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றுள்ளார். அவரது பழைய வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். .
இந்த நிலையில் கயாடு லோஹர் ரசிகர்களின் அன்பு குறித்து நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழில் பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு எங்கே ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. எனக்கும் டிராகனுக்கும் பல்லவிக்கும் கிடைக்குற இந்த அன்பும் ஆதரவும் மிகையான உணர்வு. தியேட்டர்ல நீங்க எனக்கு அடிக்கிற விசிலா இருக்கட்டும் இன்ஸ்டாகிராம்ல என்னோட டான்ஸ், எடிட்ஸ், ஷேர்ஸ், ஸ்டோரிஸ் இருக்கட்டும் மற்றும் அழகான கமென்ட்ஸ்லாம் இருக்கட்டும்... இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் தமிழ் பொண்ணு இல்ல, தமிழ் சரியா பேச வராது. ஆனால் நீங்க எனக்கு கொடுக்கிற அன்பு விலைமதிப்பில்லாதது. நான் நம்புகிறேன், இந்த அன்பு என் படங்களின் மூலமா உங்களுக்கு திருப்பி தருவேன் மற்றும் உங்களை பெருமை படுத்துவேன்” என்றார். அதே போல் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் பேசி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கயாடு லோஹர் அசாமைச் சேர்ந்தவர். இப்போது புனேவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மாடலாக இருக்கும் இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். பின்பு மலையாளம், தெலுங்கு, மராத்தி என அடுத்தடுத்து தலா ஒரு படம் நடித்துள்ளார். பின்பு மீண்டும் மலையாளத்தில் ஒரு படம் நடிக்க அடுத்ததாக டிராகன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இதையடுத்து அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்.