Skip to main content

மே ஒன்றில் மத்திய, மாநில அரசுகளை அகற்ற அனைவரும் சபதமேற்போம்-முக.ஸ்டாலின்

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01-05-2018) மே தினத்தை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தொழிலாளர் நண்பர்களிடத்தில் உரையாற்றினார் 

 

மே தின விழா நிகழ்ச்சியிலே பங்கேற்க வந்துள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை நிர்வாகிகளே, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கும் முன்னோடிகளே, மாவட்டக் கழக நிர்வாகிகளே, பேரன்பிற்குரிய தொழிலாளர் நண்பர்களே 133வது மே தின விழாவினை நாம் இன்றைக்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம். 

 

mk stalin

 

மே தினம் என்பது தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கும் நாளை போற்றக்கூடிய வகையில் இதை நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். அப்படி கொண்டாடுகிற வகையிலே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய மே தின நினைவுச் சின்னமான தொழிலாளர்களின் பெருமையை நிலைநாட்டக் கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த சின்னத்திற்கு நம்முடைய மலரஞ்சலியை செலுத்தி, இந்த மே தின விழாவை கொண்டாடி வருகிறோம்.

 

இன்றைக்கு மத்தியிலே இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் தொழிலாளர்களின் விரோத ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மத்திய மாநில ஆட்சியை அப்புறப்படுத்துவது தான் நம்முடைய முதல் நோக்கமாக அமைந்திட வேண்டும். அதற்கு உறுதியேற்கக் கூடிய நாளாக இந்த நாளை, இந்தாண்டு கொண்டாடுகிற நேரத்தில் நாம் அனைவரும் சபதமேற்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

 

1967ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் தலைமையில் முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்த பிறகு தான், தொழிலாளர்களின் தினமாக இருக்கும் இந்த மே தினத்திற்கு அரசு விடுமுறையை ஏற்படுத்தி தந்தார்கள். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரது இதயத்தை இரவலாக பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, “அறிஞர் அண்ணா மே தினத்தை விடுமுறையாக தந்தார், அவருடைய தம்பியாகிய நான், ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்கிறேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அதனை நிறைவேற்றி தந்தார்கள்.

 

mk stalin

 

இன்னும் சொல்ல வேண்டுமென சொன்னால், இது மத்திய அரசுக்கும் பொருந்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்து, அதற்கு பின்னால் அன்றைக்கு பாரத பிரதமராக இருந்த மண்டல் கமிஷன் நாயகனாக விளங்கிய வி.பி.சிங் அவர்களிடத்தில் வாதாடி போராடி மத்திய அரசு ஊழியார்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற்றுத் தந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். எனவே தொழிலாளர்களுக்கு என்றைக்கும் குரல் கொடுக்கும் ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

 

அண்மையிலே நடந்த ஒரு செய்தியை உங்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டுமென சொன்னால், நம்முடைய போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்திலே ஈடுபட்ட செய்தியெல்லாம் தெரியும் மறந்திருக்க மாட்டீர்கள். அது இன்றைக்கு நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருக்கும் பிரச்சினை. அந்தச் சூழ்நிலையில் தான், இன்றைக்கு இருக்கும் ஆட்சி சட்டமன்றத்திலே சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தப் போகிறோம் எனச் சொல்லி, ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மாத சம்பளம் 55 ஆயிரம் ரூபாய், அதனை உயர்த்தி 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

 

வெளியிட்ட உடனே நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எழுந்து, அதுகுறித்து ஒரு விளக்கத்தை சொன்னேன், நீங்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறீர்கள், இன்றைக்கு நாட்டிலே எல்லா தரப்பு மக்களும் பல்வேறு கொடுமையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.

 

விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகி மாண்டு கொண்டிருக்கிறார்கள், நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அதிலும் குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களின் கோரிக்கையை நிறைவேறுகிற வகையிலே சட்டமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு நீங்கள் தருகிற அந்த ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் உட்பட 89 சட்டமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தை பெற்று சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னேன்.

 

mk stalin

 

ஆனால், இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக அரசும், முதலமைச்சரும் அதுகுறித்து எந்த விதமான விளக்கமும் தரவில்லை. இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டீர்கள் என்றால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெற்றுக்கொண்டு வருகிறார்கள். நாங்கள் இன்னமும் அந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன். எப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை தீருகிறதோ அப்போது வரையில் அதிகமாக தரக்கூடிய ஊதியத்தை பெருவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

 

இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு காரணம் என்னவென்று கேட்டால், என்றைக்கும் தொழிலாளர் நண்பர்களுக்கு பக்கபலமாக இருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வகையில் என்றைக்கும் எங்களுடைய பணி தொடரும் தொடரும் என்கிற உறுதியோடு தொழிலாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகளை என்னுடைய சார்பிலே மட்டுமல்ல, இன்றைக்கும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன் எனக்கூறினார். 

சார்ந்த செய்திகள்