
தர்மபுரியில் நடுநிலைப் பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த உணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு கூடம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர், ஒப்பந்தத்தாரை எச்சரித்ததோடு அபராதம் விதித்துள்ளார்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு செய்த பொழுது பராமரிக்கப்படாமல் அசுத்தமடைந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், ''இது கிச்சன் மாதிரியே இல்லை. இதையெல்லாம் சுத்தம் பண்ணுங்க. பழச எல்லாம் எடுங்க. குப்பையை எடுங்க. மேலே இடிந்து விழுகிற மாதிரி இருக்கிறது. அதை கொத்தி விட்டு பூசச் சொல்லுங்க. உங்க வீடா இருந்தா இப்படி வச்சுக்குவீங்களா? சொல்லுங்க நான் ஒத்துக் கொள்கிறேன். இங்கிருந்து இத்தனை குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கில் போட்டு கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இவ்வளவு மோசமாக வைத்திருந்தால் என்ன அர்த்தம்? ஃபைன் போடுங்க. ஃபைன் போட்டா தான் இன்னொரு தடவை பண்ண மாட்டீங்க'' என ஒப்பந்தம் எடுத்திருந்த கார்த்திக் இண்டஸ்ட்ரீஸ் நிறுனவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மீண்டும் இதுபோல் இருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.