திருவாரூர் மாவட்டம் களப்பாள் பகுதியில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் விஷவாயு வெளியேறும் அபாயம் உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் காப்பாள் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் ஒ.என்.ஜி.சி கிணறுகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருவாரூர் மாவட்டம் கோவில் களப்பால் பகுதியை மையமாக வைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.
இந்நிலையில் சாளுவனாறுக்கு தென்பகுதிகளில் களப்பாள், கோவில்களப்பாள், நாராயணபுரம் களப்பாள், அக்கரைக் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளின் அருகிலும், களப்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் தோண்டப்பட்ட கிணறுகளில் கச்சா எண்ணெய் எடுத்துவந்த நிலையில் திடீரென கடும் விஷவாயு வெளியேற துவங்கியதால் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. அதை நிரந்தரமாக மூடப்படாததால் என் எந்நேரமும் விஷ வாயு வெடித்து வெளியேறி பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது
இதனையறிந்து மக்கள் அச்சத்திற்கு ஆளான நிலையில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் மற்றும் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் முன்னிலையில் கடந்த 2010ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் அக்கிணறுகளில் விஷவாயு வெளியேறியதால் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், பேரபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடனடியாக சிமெண்ட் கரைசல் மூலம் கிணறு முழுமையும் நிரந்தரமாக மூடிவிடுவதாக எழுத்துப்பூர்வமாக ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இது நாள் வரையில் அடைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லை. இதனால் எந்த நேரத்திலும் விஷவாயு வெளியேறி பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மக்களை பேரிடரிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவன கிணறுகளின் பாதிப்புகள் குறித்து உயர்மட்டகுழு அமைத்து ஆய்வு செய்திட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தப்போகிறேன்," என்றார்.