உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்ப் - உத் தஹிரிர் என்ற அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹிஸ்ப் - உத் தஹிரிர் அமைப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை( என்.ஐ.ஏ) இந்தியாவில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஹிஸ்ப் - உத் தஹிரிர் அமைப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் ஹிஸ்ப் - உத் தஹிரிர் அமைப்பில் இருந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்கப் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் ஹிஸ்ப் - உத் தஹிரிர் அமைப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.