![post office](http://image.nakkheeran.in/cdn/farfuture/DcyfF5lAtyK52puz29epyn_Thn6UUFJdRB1r22viPAk/1533347658/sites/default/files/inline-images/ktm%20post%20office%20lock.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கொத்தமங்கலத்தில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள விவசாயிகள் தபால் நிலையத்தை பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், விவசாயத்தை அழித்து மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்ப்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டங்களை ரத்து செய்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலில் இருந்த விவசாயிகள் திடீரென.. மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு.. தமிழக அரசே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடு.. என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுடன் தபால் நிலையம் நோக்கி விவசாய சங்கம் துரைராசு தலைமையில், ஆனந்தன், விஜயகுமார், காசிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தபால் நிலையம் முன்பு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து தபால் நிலைய ஊழியர்களை வெளியேற்றிவிட்டு தபால் நிலையத்தை இழுத்து பூட்டினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து தபால் நிலையத்தை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.