
நேற்று சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்குப் பதிலளித்துப் பேசுகையில், ''எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாஜகவை பொருத்தமட்டில் அகில இந்தியத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி தான் நடக்கும். அண்ணாமலை சொல்லி இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரை யாரும் தனியாக போட்டி போடுவதில்லை. யாராவது ஒரு கட்சி கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் - திமுக, பாஜக - திமுக, பாஜக - அதிமுக இப்படித்தான் கூட்டணியில் வந்து கொண்டிருக்கிறோம். தனியாக யாராவது போட்டி போடுகிறார்களா அல்லது தனியாக போட்டி போடுகிறோம் என அறிவிக்க முடியுமா? இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி இல்லை. அண்ணாமலை சொல்வது அவர் தனிப்பட்ட கருத்து. அதற்கு நாம் எந்த விளக்கமும் சொல்ல முடியாது. எங்களுடைய அகில இந்தியத் தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் சொல்ல முடியும்” என்றார்.