பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் சமீப காலங்களில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பட்டாக்கத்தியை சாலையில் தீட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் கடந்த சில இடங்களுக்கு முன்பு பிறந்தநாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் பெரிய பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடியதோடு ஈசிஆர் சாலையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அணிவகுப்பாக சென்றவர்கள் பட்டாகத்தியை சாலையில் தீட்டி தீப்பொறி கிளம்பும் வகையில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளம் வாயிலாக காவல்துறையினரின் பார்வைக்கு சென்ற நிலையில் இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கிரேன் மூலமாக பெரிய மாலையை எழிலரசனுக்கு சூட்டிய இளைஞர்கள் காரில் பட்டாக்கத்தியைத் தேய்த்தபடி செல்லும் வீடியோ காட்சிகளை 'லீ பிரதர்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எங்களுக்கு எதிரிகளே இல்லை' என்ற வாசகத்தோடு பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.