கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது மேல்விழி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசாரியோ வயது 45, இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிகளுக்கு ரென்சிமேரி என்ற ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணி இறந்துவிட்டார். மனைவி இறந்த பிறகு ரோசாரியோ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், தாயை இழந்த குழந்தை ரென்சிமேரியை தாய்வழி பாட்டி பச்சையம்மாள் வயது 70, வளர்த்து வருகிறார். அதே வீட்டில் ஒரு பகுதியில் இறந்து போன ஜெயராணியின் மூத்த சகோதரி ஆரோக்கியமேரி வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் பாட்டி பச்சையம்மாள் தினசரி கூலி வேலைக்குச் சென்று அந்த வருமானத்தைக் கொண்டு பேத்தி ரென்சி மேரியுடன் வாழ்ந்து வந்தார். வழக்கம்போல பச்சையம்மாள் நேற்று காலை கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். அவர் வேலைக்குச் செல்லும்போது தனது மூத்த மகள் ஆரோக்கிய மேரியிடம் குழந்தை மேரிக்கு சாப்பிடுவதற்கு இட்லி கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்படி ஆரோக்கியமேரி, அக்கம்பக்கம் பிள்ளைகளோடு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரென்சிமேரியை அழைத்து இட்லி சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால், குழந்தை ரென்சி மேரி தனக்கு இட்லி வேண்டாம் என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் சென்று மீண்டும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.
சாப்பிட கூப்பிட்டால் வராமல் விளையாட்டு முக்கியமா என்று கோபம் கொண்ட ஆரோக்கியமேரி எதிர்வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து உதைத்து தரதரவென்று இழுத்து வந்து வீட்டுக்குள் தள்ளி கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுள்ளார். அதோடு குழந்தை சாப்பிட மருத்த கோபத்தினால் குழந்தை ரென்சி மேரியை வீட்டுக்குள் வைத்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். குழந்தை வலி தாங்க முடியாமல் சத்தமிட அதன் அலறல் சத்தம் அக்கம்பக்க வீடுகளுக்கும் கேட்டுள்ளது. பதறிப்போன அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை பலமாக தட்டியுள்ளனர். கதவைத் திறந்ததும் குழந்தையை ஆரோக்கியமேரியிடம் இருந்து மீட்டனர். அப்போது குழந்தை சுயநினைவற்று இருந்துள்ளது.
உடனடியாக குழந்தையை தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்துள்ளனர். இட்லி சாப்பிட மறுத்த 5 வயது குழந்தையின் உயிர் போனது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன் தங்கையின் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மாவின் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.