கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்த அவரது அறிக்கை:
’’கலைஞர் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அமைந்திருக்கும் வளாகத்திற்குள் இடம் ஒதுக்க வேண்டுமென்று திமுக செயல் தலைவர் அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து எழுத்து பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னரும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக காரணம்காட்டி இடம் ஒதுக்க தமிழக முதல்வர் மறுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சுமார் 80 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்குத் தொண்டாற்றிய, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்
கலைஞர். அவருக்கு உரிய மரியாதையை தமிழக அரசு தரவேண்டும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் கோரிக்கையும் ஆகும். இதை கவனத்தில் கொண்டு மெரினாவில் இடம் ஒதுக்கி அமைதியான முறையில் தலைவர் கலைஞரின் நல்லடக்கம் நடைபெற தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்’’.