Skip to main content

ஆய்வுக்கு போன அதிகாரியை கடலுக்குள் தள்ளிய சம்பவம் ; சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்த நாட்டுப் படகு மீனவர்கள்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Arrested those who pushed the officer who went for inspection into the sea; Country boat fishermen sitting on the road and begging!

தமிழ்நாடு கடல் பகுதியில் பல ஆண்டுகளாக நாட்டுப் படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் மீன்பிடிவலைகளை பயன்படுத்துவதில் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக விசைப் படகுகளை ஆய்வு செய்ய கடலுக்குள் சென்ற மீன்வளத்துறை அதிகாரியை அவரது படகு மீது மோதி கடலுக்குள் தள்ளிய சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணமேல்குடி அருகில் உள்ள மீன்பிடி கிராமம் பொன்னகரம். இங்கு 300 க்கும் மேற்பட்ட உள்ளூர் நாட்டுப்படகு மீனவர்கள் காலங்காலமாக மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடலுக்குள் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சென்று கிடைக்கும் மீனை பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்புவார்கள்.

அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து தொழிலுக்காக வந்து மீனவ கிராமங்களில் தங்கி இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டிய விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீன்பிடிக்க வேண்டிய பகுதிக்குள்ளே மீன் பிடிப்பதுடன் மீன் வளங்களை அழிக்கும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள அரிவலை, மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன் குஞ்சுகள் கூட அந்த வலைகளில் மாட்டிக் கொள்கிறது. இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஆகவே விசைப்படகில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் நாட்டுப் படகு மீனவர்கள் வைத்த கோரிக்கை தண்ணீரில் போட்ட கல்லாகவே உள்ளது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி எங்கள் எல்லைக்குள் மீன் பிடிக்கிறார்கள் அவர்களின் படகுகளை சோதனை செய்து நடவடிக்கை எடுங்கள் என்று மீன்ளத்துறை சரக ஆய்வாளர் கனகராஜ்  மற்றும் அலுவலர்கள் மீனவர்களுடன் அவர்களின் 2 நாட்டுப்படகுகளில் ஏறி கடலுக்குள் சென்ற போது விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த சில விசைப்படகுகளை நிறுத்தி வலைகளை கொடுங்கள், கரை திரும்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக வந்த ஒரு விசைப் படகு மீன்வளத்துறை அதிகாரிகள் சென்ற நாட்டுப்படகில் மோதி மீன்வளத்துறை சரக ஆய்வாளர் கனகராஜை கடலுக்குள் தள்ளிவிட்டு படகையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

Arrested those who pushed the officer who went for inspection into the sea; Country boat fishermen sitting on the road and begging!

அருகில் இருந்த மீனவர்களும் சக அலுவலர்களும் கடல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சரக ஆய்வாளர் கனகராஜை மீட்டு மற்றொரு நாட்டுப்படகு மூலம் கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து பொன்னகரம் நாட்டுப் படகு மீனவர்கள் அதிகாரியை கடலுக்குள் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடு! தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்ய வேண்டும். விசைப்படகு மோதி உடைத்த நாட்டுப்படகுக்கு இழப்பீடு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சாலையில் அமர்ந்து துண்டை விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து கடலுக்குள் மீன்வளத்துறை சரக ஆய்வாளர் சென்ற நாட்டுப்படகை இடித்து ஆய்வாளரை கடலுக்குள் தள்ளிய விசைப்படகு மீனவர்களான கொடிக்குளம் தாஸ் மகன் சிவக்குமார் (28), கோட்டைப்பட்டினம் ரஹமத் நகர் மரியசெல்வம் மகன் சூரியபிரகாஷ் (25), கோட்பை்பட்டினம் சதாம் நகர் வேலாயுதம் மகன் சூர்யா (22), கோட்டைப்பட்டினம் ராம் நகர் அம்மாசி மகன் கருப்பசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணல் திருட்டை தடுக்கப் போன கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டது போல தடைசெய்யப்பட்ட வலைகளை ஆய்வு செய்யச் சென்ற மீன்வளத்துறை சரக ஆய்வாளர் சென்ற படகை மோதி உடைத்து கடலுக்குள் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்