அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்குச் சுற்றுவட்டாரக் கிராமத்தில் இருந்து ஏராளமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்க, ஏழை, எளிய மாணவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாகப் போராடி, அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசின் தலைமைக் கொறடா உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்பாலும் 1963 -ல் துவங்கப்பட்ட ஏலாக்குறிச்சி பள்ளி, தற்போது 'மாதிரி பள்ளி'யாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
57 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 'மாதிரி பள்ளி' சலுகையால் கிடைக்கும் சிறப்புகள் குறித்து, கல்வி அதிகாரிகள் கூறுகையில்; எல்.கே.ஜி முதல் 12 -ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியாகக் கல்வி. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மாணவர்களுக்கும் தரமான தனியார்ப் பள்ளிகளில் உள்ளது போன்ற கணினி வழி 'ஸ்மார்ட் கிளாஸ்' வழங்கிட முடியும். தரமான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கிராமப்புற மாணவர்களுக்கு, உயர்தரமான கல்வி இதன்மூலம் கிடைக்கும் எனத் தெரிவித்தனர்.
மேலும், கல்வி பயில தஞ்சை, அரியலூர், கீழப்பழுவூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், திருச்சி எனப் பல மாவட்டங்களுக்குச் செல்வது தவிர்க்கப்படும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக ஏலாக்குறிச்சி கிராமத்தின் மாதிரி பள்ளிக்கு, முதல் கட்டமாக 20 இலட்சம் நிதி உதவி தமிழக அரசு வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமப்புற ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் கிராம மக்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினர்.