புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற 80 வயது மூதாட்டி பாக்கியம். அப்பகுதியில் உள்ள நாடியம்மன் கோவிலில் இருந்த இவர் பிறகு அங்குள்ள சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வந்து தங்கினார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பல ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உணவளித்து வரும் அறிவொளி கருப்பையா, பாக்கியம் பள்ளிக்கூடத்தில் கிடப்பதைப் பார்த்து பல நாட்களாக உணவளித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு காலை உணவோடு சென்ற அறிவொளி கருப்பையா மூதாட்டி பாக்கியத்தை காணாமல் தேட அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் காவலர் ஒருவர் 108 ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றார் என்று கூறியுள்ளனர். 80 வயது மூதாட்டியை 108-ல் அழைத்துச் சென்றது யார் என்பது தெரியாமல் தேடிய அறிவொளி கருப்பையா ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிப்பதை அறிந்து அங்கே சென்ற பார்த்த போது மூதாட்டி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.
ஒரு காவலர்108 ஆம்புலன்ஸில் அழைத்து வந்து சேர்த்ததாக சொன்ன மருத்துவமனை நிர்வாகி, காவலரின் பெயர் யாசர் அராபத் வடகாடு காவல் நிலையம் என்ற முகவரிமும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார்.
அந்த செல்போனில் அழைத்த அறிவொளி கருப்பையாவிடம்.. ''சில நாட்களுக்கு முன்பு இரவு ரோந்து சென்ற போது தனியாக கிடந்த மூதாட்டியை பார்த்தேன். ஏதாவது உதவி வேண்டுமானால் என்னை அழையுங்கள் என்று என் செல்போன் எண்ணையும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்திருந்தேன்.' சில நாட்களுக்கு பிறகு ஒரு புது எண்ணிலிருந்து போன் வந்தது. மூதாட்டிக்கு ரொம்ப முடியல என்று உடனே 108 க்கு போன் பண்ணிட்டு வந்து ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தேன். இப்ப பாட்டி நல்லா இருக்காங்களா''என்று கனிவோடு விசாரித்துள்ளார்.
சிகிச்சை முடிந்த பிறகு மறுபடியும் மூதாட்டியை தனியாக விட மனமில்லாத அறிவொளி கருப்பையாவும்,காவலர் யாசர் அராபத்தும் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலபிரியா உதவியுடன் வல்லத்திராகோட்டை அருகில் உள்ள ஒரு காப்பகத்தில் மூதாட்டி பாக்கியத்தை ஒப்படைத்தனர்.
பெற்றவர்களையே வெறுப்போடு வெளியேற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் யாரோ ஒரு மூதாட்டிக்காக இவர்கள் இதமாக நடந்து கொண்டதைப் பார்த்து இன்னும் மனிதம் வாழ்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.