குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்குட்பட்ட குழித்துறைப் பகுதி எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். கேரளா, தமிழகம் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியில், அந்தப் பகுதி சிக்கி மூச்சு விடுவதற்கே திணறிக் கொண்டிருக்கும்.
இந்த இடத்தில் போலீஸ் சீருடையில் வாலிபர் ஒருவா் திடீரென்று போக்குவரத்தைச் சரி செய்து கொண்டிருந்தார். மேலும் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார். அந்த வாலிபா் மீது அங்கு இருந்த வியாபாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகள் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, “நான் தான் களியக்காவிளைக்கு வந்திருக்கும் புதிய எஸ்.ஐ” எனக் கூறியிருக்கிறார்.
இதனை நம்ப முடியாத அந்த வியாபாரிகள் களியக்காவிளை போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உளவுப் பிரிவு போலீசாரிடமும் மாஸ்க், ஹெல்மெட் கேட்டு அவர்களுக்கும் அபராதம் விதித்து, ரூ.2,000 கேடடுள்ளார். இதனையடுத்து, நேரடியாக வந்த களியக்காவிளை போலீசார், அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் செக்யூரிட்டியாக வேலை பார்த்துவருகிறார் என்பது தெரியவந்தது. இவர், நித்திரைவிளை வன்னியூா் பகுதியைச் சேர்ந்த பிபின் (25) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபர் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூல் செய்த ரூ.8 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.