Skip to main content

அங்கித் திவாரி கைது! - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Ankit Tiwari arrested! What does the Tamil Nadu Anti-Corruption Department say?

 

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையால் ரூ. 20 இலட்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. 

 

அதில், ஒன்றிய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

 

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும் பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ. 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர், 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக 01.12.2023 காலை 10.30 மணியளவில் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 

இச்சோதனையின்போது இவருக்குத் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்