தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகளால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில், திருப்போரூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது காவி நிற துண்டை அணிவித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், ஓ.எம்.ஆர் சாலையில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் முன்பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த சில மர்ம நபர்கள் எம்.ஜி.ஆரின் சிலையின் மீது காவித் துண்டை அணிவித்து சென்றுவிட்டனர். இதனிடையே, இன்று காலை பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள், எம்.ஜி.ஆர் சிலை மீது காவித் துண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவர்கள் இது குறித்து அதிமுக வினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரின் அதிமுக ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் அதிமுகவினர் அங்கு வந்து குவிந்தனர். மேலும், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டை அணிவித்தவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு, சாலை மறியலை கைவிட்டு அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர், எம்.ஜி.ஆர் சிலையின் மீது இருந்த காவித்துண்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.