கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 20-ஆம் தேதி போராட்டம் என்று பாட்டாளி மாணவர் சங்கத் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேலையில்லாப் பட்டதாரிகள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இளைஞர்களின் நலனுக்கு எதிரான இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் 70 லட்சம் பேருமாக மொத்தம் ஒன்றரை கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பைப் பெருக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழிப்பதற்காக குழு அமைத்துள்ளது. இருக்கும் பணியிடங்களாவது நேர்மையாக நிரப்படுகின்றனவா? என்றால் அதுவும் இல்லை. தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக் களம் இந்தியாவின் பிற மாநிலத்தவருக்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்கு தான் வேலை என்ற நிலை உருவாகியுள்ளது. மொத்தத்தில் வேலைவாய்ப்புக்களம் சீரழிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் படித்து விட்டு வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கடன்களை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. நாடு முழுவதும் ரூ.65,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில், 30-35% கடன்களை, அதாவது சுமார் ரூ.20,000 கோடியை தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் வாங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட கல்விக் கடனில், 3.66 லட்சம் மாணவர்கள் வாங்கிய ரூ.6364 கோடி வாராக் கடனாக மாறியிருக்கிறது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.1565 கோடி வாராக்கடனில் ரூ.915 கோடி தனியார் கடன் வசூல் நிறுவனங்களிடம் விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்தியன் வங்கிக்கு சொந்தமான ரூ.76.49 கோடி வாராக் கடனும், பேங்க் ஆப் இந்தியாவின் ரூ.38.66 கோடி வாராக்கடனும் தனியார் கடன் வசூல் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழகம், கேரளத்தை சேர்ந்தவையாகும்.
படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். வாராக் கடனை வசூலிப்பதற்காக நாகரிகத்துக்கு ஒவ்வாத சாம,பேத, தான, தண்ட முறைகளை தனியார் நிறுவனங்கள் கையாளும். தினமும் தொலைபேசியில் மாணவர்களை தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் மிரட்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசும். வேலை கிடைக்காததால் ஏற்கனவே குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தினமும் அவமரியாதைகளை எதிர்கொண்டு வரும் வேலையில்லாத பட்டதாரிகள், இப்போது கல்விக் கடனுக்காக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் மரியாதைக் குறைவான நெருக்கடிகளால் அவமானமடைந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும்.
இத்தகைய நெருக்கடியான நிலையிலிருந்து மாணவர்களை மீட்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக மாநில அரசுக்கு அதிக பங்கு உண்டு. ஏனெனில், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில்,‘‘வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையின்றி உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டு வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 20-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.