கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் வாடிக்கையாளர்களின் வயது உச்சவரம்பு 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.
இவற்றின் மூலம் பொது நகைக்கடன், பயிர்க்கடன், பண்ணை சாரா கடன், சிறு வணிகர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வாடிக்கையாளர்கள், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களிலும் கடன் பெறும் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களின் வயது உச்சவரம்பு 60ல் இருந்து 70 ஆக உயர்த்தி ஆணை வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்த விவரத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு தெரிவித்து, உரிய வழிகாட்டுதல்கள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.