நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட கனமழைக்கு மலைகள் சரிந்து வீடுகள், உடமைகள் சேதமடைந்து அன்றாடம் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள். பழங்குயின மக்களுக்கு பாத்திரங்கள் கூட எஞ்சவில்லை. நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களிடம் எங்களுக்கு பசியை போக்க அரிசி கொடுக்குறீங்க ஆனா அதை சமைக்க பாத்திரம் இல்லை என்று வேதனையுடன் சொல்வதை தன்னார்வலர்கள் மனம்கனக்க கேட்டு வந்து பாத்திரங்களோடு சென்றனர். சில பழங்குடியினப் பெண்கள் தங்களுக்கு தையல் போன்ற தொழிற்பயிற்சி வேண்டும் என்று கேட்க அதையும் செய்வதாக தன்னார்வலர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இப்படி ஒவ்வொரு கிராமமாக சாலை இல்லாத இடங்களுக்கெல்லாம் தலையில் சுமந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருவதடன் அவர்களின் துயரங்களையும் நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள் தன்னார்வலர்கள்.
இதில் ஒரு குழவினர் ஒவேலி பார்வர்டு காவல்நிலையத்தின் கீழே செல்லும் சாலையில் நிவாரணப் பொருட்களுடன் பயணித்தனர். அந்த சாலை பாண்டிநகர் பகுதிக்கு சென்றது. சுமார் 2 கி மீ தூரம் நடந்தனர் ஆனால் பாதி வழியில் சாலையை காணவில்லை. சாலை இருந்த இடத்தில் ஆறு ஓடியது. மிகுந்த சிரமங்களுக்கிடையே பாண்டி நகரில் உள்ள 20 வீடுகளுக்கும் செல்ல முடியாவிட்டாலும் பல வீடுகளுக்கு சென்றனர். கையில் இருந்ததை கொடுத்தனர். அப்போது அந்த இளைஞர்களிடம்.
இங்கிருந்து என்ன வாங்க வேண்டியிருந்தாலும் பார்வர்டுதான் போகனும், எங்கள் குழந்தைகள் எல்லாரும் பார்வர்டு போய்தான் படிக்கனும். ஆனா மழையால் சுமார் 200 சாலையை காணும் சாலையில் இப்ப தண்ணீர் ஓடுது, பாறைகள் கிடக்கிறது. அதனால எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு போகமுடியல. நாங்களும் வேலைக்கு போக முடியாமல் முடங்கி கிடக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு அ.ராஜா எம் பி வந்தார் சாலையை சீரமைக்கிறதா சொன்னார் எந்த வேலையும் நடக்கல. சில அதிகாரிகளும் வந்தார்கள் போனார்கள் ஆனால் சாலைதான் வரல.உடனடியாக சாலையை சீரமைக்க முடியாதுதான் அதனால உடைப்புகளுக்கு அருகில் மரப்பாலமோ, எஸ்டேட்ல மாற்று பாதையோ உடனடியாக அமைத்துக் கொடுத்தால்தான் நாங்கள் வெளியே வரமுடியும் என்றனர்.
பாண்டி நகரில் சாலையில்லாமல் சிறைபட்டுள்ள மக்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி கொடுங்கள் என்று தன்னார்வ இளைஞர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக எம்பி அங்கே போனாரே என்பதற்காக அந்த பகுதியை புறக்கணிக்காமல் மக்களின் நிலையை மனதில் கொண்டு மாற்று வழி ஏற்படுத்தினால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் மக்கள் வேலைகளுக்கும் செல்வார்கள். அதிகாரிகள் கவனிப்பார்கள் மாற்று வழி ஏற்பாடு செய்வார்கள் என நம்புவோம்.