அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஒரு மாதத்திற்கு அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், போதிய பாதுகாப்பு வழங்குமாறும் காவல்துறையைக் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வட்டாட்சியர் ஒப்படைப்பதற்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.