கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாவட்ட திட்ட அலுவலர் வீட்டில் இருந்து கணக்கில் வராத 8 லட்சம் ரூபாயை இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வந்தவர் நரசிம்மன் (49). கிருஷ்ணகிரி டி.பி. சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அந்தப் பகுதியில் வெல்ல மண்டி வைத்துள்ளார். இவர், மாவட்ட மைய நூலகம் எதிரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகத்தில் தனக்கும் ஒரு கடை வாடகைக்கு ஒதுக்கக்கோரி விண்ணப்பித்து இருந்தார்.

இது தொடர்பாக ஜெயக்குமாரிடம் பேச முன்வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி (32), திட்ட அலுவலருக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயக்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வகுத்துக்கொடுத்த திட்டத்துடன் செப்டம்பர் 7, 2018ம் தேதி, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கு பணத்துடன் சென்ற ஜெயக்குமார், அதை சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், அதை திட்ட அலுவலரிடம் கொடுத்தார்.
அப்போது அங்கே முன்கூட்டியே மாறுவேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார், நடேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக சத்தியமூர்த்தி, அலுவலக உதவியாளர் அசோக்ராஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.இதையடுத்து அந்த அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். கைதான மூவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், திட்ட அலுவலர் நடேசன் வீட்டில் ஆய்வு செய்ததில் அங்கிருந்து கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தத் தொகை, வீட்டின் சில மேஜை டிராயர்களிலும், ஜன்னலிலும் பிளாஸ்டிக் உறையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.
கைதான மூன்று பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நடந்த லஞ்ச ஒ-ழிப்புப்பிரிவு போலீசாரின் சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.