தமிழகப் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கோடை விடுமுறையின் இறுதியில்தான் தொடங்கும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்ட நடவடிக்கைகள் மூலம் இதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கொண்டு சேர்ப்பதன் முதல் நிகழ்ச்சியை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் உள்ள பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அனைத்து பள்ளிகளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 32,000 பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கோடை விடுமுறைக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கியது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது. இந்த கோடை விடுமுறைக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெற்றோர்கள் விண்ணப்பங்களைப் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.