
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது தாயார் வசந்தி (47) நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்தது. அப்போது வெள்ளிக்கிழமை என்பதால், வசந்தியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு, செயின் உட்பட 20 சவரன் நகைகளை வீட்டில் வைத்து எடுக்க வேண்டாம், சுடுகாட்டில் வைத்து எடுத்துக்கொள்ளலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, வசந்தியின் சடலம் ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் சடலத்தை பிடித்து அழுதபடி சிறிது தூரம் சென்றனர். கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் சடலத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழற்றினர். அப்போது, கழுத்தில் தாலிச் சரடு மற்றும் தங்கச் சங்கிலி இல்லாததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை பிடித்து அழுவதுபோல் நடித்த யாரோ கில்லாடி பெண் 20 சவரன் நகைகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர், சடலத்தை தகனம் செய்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வசந்தாவின் மகன் பிரபு நேற்று திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.