ஜாக்கோ – ஜியோ வின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கொடி ஏற்றினார்கள்.
ஆனால் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை நாளிலும் ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு 17 (பி) விளக்க நோட்டிஸ் அனுப்பும் பணி தொடங்கி நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 4216 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி, வட்டார வளமைய பயிற்றுனர்கள் என்று 2814 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் பணிக்கு வராமைக்காண விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் 17(பி) நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டிஸ்கள் எந்த வழியில் ஆசிரியர்களை சென்றடையும் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் 28 ந் தேதி மாலைக்குள் பதில் கிடைக்காத நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு கடந்த 3 நாட்களாக விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகிறது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 5700 விண்ணப்பங்களே வந்துள்ளதால் அனைவருக்கும் பணியிடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர்களையும், மற்ற துறை அதிகாரிகளையும் வஞ்சிக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தாமல் பணியிடை நீக்கம் செய்து மிரட்டப்படுவதால் 28 ந் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் சங்க நிர்வாகிகளை முன்னதாக கைது செய்ய போலிசார் கண்காணித்து வருவதால் சங்க நிர்வாகிகள் மாற்று இடங்களில் தங்கி இருந்து ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.