தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தரப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலில் பள்ளி முத்திரை இட்டு வழங்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.