சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (05/06/2022) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரண்டு பொருட்களைத் தனியாரிடம் வாங்கியதால், அரசுக்கு ரூபாய் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்த் மிக்ஸை ஆவினுக்கு பதில் தனியாரிடம் வாங்குவதால் மட்டும் அரசுக்கு ரூபாய் 45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனிதா டெக்ஸ் காட் நிறுவனத்துக்கு தந்த ரூபாய் 450 கோடி ஒப்பந்தத்தில் ரூபாய் 100 கோடி ஊழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான தொகுப்பில் ரூபாய் 77 கோடி இழப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தர வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத்தை தருகிற, ஊட்டத்தை தருகிற பொருட்களை அரசே வாங்கித் தந்தால் அவர்களது உடல் நலனுக்கு நல்லது என்கிற வகையில் 18 ஆயிரம் ரூபாயை ஒட்டுமொத்தமாக கையில் தந்து விடாமல் ஒரு குறிப்பிட்ட 10 சதவிகிதம் தொகையில் ஊட்டச்சத்து பொருட்களை வாங்கி தரலாம் என்ற வகையில் 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் என்ன பொருட்களையெல்லாம் வழங்கலாம் என பட்டியல் தயாரித்து டெண்டர் மூலம் தரப்பட்டது. மருத்துவ சேவை கழகம் அமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு நடக்கும் டெண்டரில் டெக்னிக்கல் பிட், பைனான்சியல் பிட் என இரண்டு வரும். அதில் பொருளாதார ரீதியாக யார் குறைந்த விலையில் தருகிறார்களோ அவர்களுக்கு 'எல் ஒன்' என்ற முறைப்படி அவர்களுக்கு டெண்டர் அனுமதி கொடுப்பதுதான் அரசின் நடைமுறை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்கென ஒதுக்கப்பட்ட 450 கோடி ரூபாய் பொருட்கள் வாங்கப்படவில்லை.
கரோனா பேரிடர் காலத்தில் வாங்காமல் விட்டுவிட்டார்கள். பயனாளிகளுக்கு மகப்பேறு காலம் முடிந்துவிட்டது. அநேகமாக குழந்தைகள் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும். எனவே வாங்கவேண்டாம் என சொல்லி அரசுக்கே திரும்ப கொடுத்துவிட்டோம். எதிர்வரும் ஆண்டுக்கு இந்த பொருட்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு டெண்டர் விட்டுள்ளார்கள். டெக்கினிக்கல் பிட்தான் முடிந்துள்ளது. அதன்பிறகு பைனான்சியல் பிட் அதன் பிறகுதான் 'எல் ஒன்' யார் வருகிறார்கள் என அறிவிக்க வேண்டும். ஆவின் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல; டீ அல்லது காஃபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும். ஆவின் ஹெல்த் மிக்ஸ் கர்ப்பிணிகளுக்கு உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த வீட்டிலாவது தாய்மார்கள் இதனை ஊட்டச்சத்திற்காக பயன்படுத்துகிறார்களா? ஒருத்தரும் தமிழ்நாட்டில் பயன்படுத்தமாட்டர்கள். அதை குழந்தைகளுக்கு வேண்டுமானால் கொடுக்கலாம். விலை குறைவு என்பதால் ஆவினில் வாங்க முடியாது. எதை வாங்க வேண்டுமோ அதைத்தான் வாங்க முடியும்'' என்றார்.