தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான வசந்த் அன் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார் சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவு குறித்து காங்கிஸ் எம்எல்ஏ விஜயதரணி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். குமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கட்சிப் பணி என்று வரும்போது தீவிரமாக செயல்படுவார். எந்த நேரத்திலும் கட்சியை விட்டுக்கொடுக்கமாட்டார்.
காங்கிரஸ் கட்சியும் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் இருமுறை நிற்க வாய்ப்பு கொடுத்தது. பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்திருக்கிறது. செயல் தலைவர் பதவி கொடுத்தும் கட்சி அழகு பார்த்தது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி குடும்பத்தினர் மீது அன்பு, மரியாதை உடையவர். அவர்களும் சகோதரர் வசந்தகுமார் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தூணாக இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக விருப்பத்துடன் மக்கள் பணி ஆற்றியுள்ளார். 'வெற்றிப் படிக்கட்டுகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார்.
எங்கள் மாவட்டத்தில் ஒன்றாக இணைந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துள்ளோம். கரோனா காலத்தில் அவரே முன்னின்று பல்வேறு உதவிகளை வழங்கினார். மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியவர். குமரி மாவட்ட மக்களுக்கு நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதேபோல் கடந்த ஓராண்டில் நிறைய பணிகளை செய்திருக்கிறார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு என்றார்.