அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர், “என்னைப் பற்றிய சில கருத்துகளை நேற்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் சொல்லும்போது அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு சொன்னால் பரவாயில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 4000 கோடி ஊழல் செய்ததாக என் மீது ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், இதனை விசாரித்து அதனை சீல் செய்யப்பட்ட அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. அதனை ஏற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதேபோல் சீல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்ற நீதிபதி அதனைப் பிரித்து படிக்காமல் அப்படியே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். உடனே நான் உச்சநீதிமன்றத்தை அணுகி அதற்குத் தடை வாங்கினேன்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்து அவர்கள் அந்த தடை ஆணையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். அப்போது உச்சநீதிமன்றம், ‘மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடத்தப்பட வேண்டும். அதுவும் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த சீல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நடத்த வேண்டும்’ என்று தீர்ப்பு அளித்தது. அதன்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் மூலமாக இந்த வழக்கை தொடர்ந்த ஆர்.எஸ். பாரதி, அவராக முன்வந்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சொன்னார். ஆனால், வழக்கறிஞர்கள் மூலம், ‘நான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறேன்’ என்று தெரிவித்தேன். இது கூட தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
“கனிமொழியை சிறையில் சந்திக்காத ஸ்டாலின்... செந்தில் பாலாஜியை சந்திக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி
முதல்வருக்கு தைரியம் இருந்தால், நாங்கள் வழக்குகளை சந்திப்பது போல், இந்த வழக்கை துணிச்சலோடு நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். நீதிமன்றங்களில் நாங்கள் குற்றமற்றவர்கள் என வாதாடும் கட்சி அதிமுக. இனி இந்த முதலமைச்சர் அதிமுகவை சீண்டி பார்க்கக்கூடாது.
அதிமுகவை பாஜகவின் அடிமை என்று சொல்கிறார். 1999ல் இதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாஜகவின் அமைச்சரவையில் திமுகவின் எம்.பி.க்கள் அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தனர். அதனால், காலத்திற்கு ஏற்றார் போல் மாறிவிடுவார்கள். அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என எவரும் எந்தக் கட்சிக்கும் அடிமையானவர்கள் கிடையாது. சொந்த காலில் நிற்கின்றவர்கள்” என்றார்.