ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஷ்பத்தூர், வேலூர் சின்னப்பட்டி, அரசப்பிள்ளைபட்டி ஆகிய பகுதிகளில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் கிராம மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் அவர், “விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள், விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல், தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்றுவருவது தொடர்கதையாக உள்ளது. தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கல்லூரிகள், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைக்கப்படும். அதுபோல் குடிநீர் பிரச்சனையும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முழுமையாக நிறைவேற்றித் தரப்படும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜா மணி, ஒன்றியச் செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கராஜ், தர்மராஜன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.