Skip to main content

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா...? உதயநிதி பதில்!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும் என்றும், அதில் கண்டிப்பாக நாம் வெற்றிபெறுவோம்" என்று கூற, மேடையில் இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எல்லாம் உதயநிதியின் பேச்சால் ஷாக் ஆனார்கள். கூட்டணியை உடைக்கிறாரா உதயநிதி என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, "உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரஸை தூக்கி சுமக்க தேவையில்லை" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். அவரின் இந்த கருத்து உடனடியாக தலைப்பு செய்தியாக தொலைக்காட்சிகளில் மாற, சுதாரித்துக் கொண்ட கே.என் நேரு, என்னுடைய விருப்பத்தை மட்டும் தான் தெரிவித்தேன். கூட்டணி தொடர்பாக தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறி நழுவினார். ஆனால், உதயநிதி மட்டும் தான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்காத நிலையில், நேற்று சென்னையி்ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதற்கான பதிலளித்தார். 

 

udhyanithi speech at dmk function

 

 

திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு  பேசியஅவர், " நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே தேதி கொடுங்கள், கூட்டம் நடத்த வேண்டும் என்று அண்ணன் சேகர்பாபு என்னிடம் விலியுறுத்தினார். நான்தான் இப்பதான் தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சதால ஒரு இடைவெளி எடுக்க விரும்பினேன். ஆனால் சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்த அவர், கையில் அழைப்பிதழை கொடுத்து, செவ்வாய் கிழமை விழா வைத்துள்ளோம் வாருங்கள் என்று கூறினார். அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பு எப்போதும் நல்ல நிலையில் இருக்கும். தற்போது மக்கள் அனைவரும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். முன்னாடி எல்லாம் யாரையாவது பார்த்தால் எப்படி இருக்கீங்கன்னு கேட்போம். ஆனால் தற்போது தண்ணீர் குடித்தீர்களா, குளித்தீர்களா என்று கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான இந்த கேடுகெட்ட எடப்பாடி ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். இங்கு அதிக அளவில் பத்திரிக்கை நண்பர்கள் வந்துள்ளார்கள். நான் திருச்சியில் பேசியதை சிலர் திரித்து பரபரப்பாக்கினார்கள். திமுக நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை மட்டும்தான் நான் தெரிவித்தேன். மற்றப்படி கூட்டணிக்கு வேட்டு வைக்கவில்லை. தவறாக புரிந்து கொண்டு சிலர் சர்ச்சையை கிளப்புகிறார்கள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்