இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா அரசு குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கடைசி காலத்திலாவது நிதிப் பகிர்வை தந்துவிடுங்கள் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ. 6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப் பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது.
ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தரப் பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப் பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள். மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்? உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப் பகிர்வை தந்திடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.